Monday, February 23, 2009

'பிளாஸ்டிக் கல்' கண்டுபிடித்த இளம் விஞ்ஞானி!


'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... அது நல்லவனாவதும் தீயவனா வதும் அன்னை வளர்ப்பினிலே...'

--இது திரைப்படப் பாடல். இதில் 'அன்னை' என்ற இடத்தில் ஆசிரியை என்ற வார்த்தையை இட்டு நிரப்பினால், அதுவே எட்டாம் வகுப்பு படிக்கும் ராபின் ஜெரால்டு இளம் விஞ்ஞானி ஆன வரலாறு!

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள நெய்வாச்சேரி அரசு நடுநிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவன் ராபின் ஜெரால்டு, இன்று இளம் விஞ்ஞானியாக... பல தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். உலகில் சுற்றுச்சூழலுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கும் பிளாஸ்டிக்கை, அதன் கேடுகளைத் தவிர்த்துக் கட்டுமானப் பொருளாக மாற்றும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்காகத்தான் இத்தனை பாராட்டுகளும்... விருதுகளும்!ஜெரால்டின் பால பருவம் பல துயரங் களைக் கடந்தது என்கிறார்கள் அவனுடைய சக மாணவர்கள்.

''அவனுக்கு எட்டு வயதானபோதே, அவன் தந்தை கொலை செய்யப்பட்டார். அதற்கு தாய்தான் காரணம் என்று நீதிமன்றத்தில் சாட்சி சொன்னான் ஜெரால்டு. அதனால் தாயைப் பிரிந்து பாட்டியின் ஆதரவிலேயே இன்று வரை வாழ்கிறான். அன்பு கிடைக்காத சூழ்நிலையால் முரட்டுத்தனம் நிறைந்தவனாக வளர்ந்த ஜெரால்டு, பாதி நாட்கள் பள்ளிக்கே போகமாட்டான். போனாலும், ஆசிரியர்களிடமும், சக மாணவர்களிடமும் சண்டை போட்டுவிட்டு வீடு திரும்பிவிடுவான். இப்படி யெல்லாம் இருந்தவன்தான்... இன்று கட்டடங்கள் கட்டும் செங்கல், சிமென்ட் கல், ஹாலோபிளாக் கல் போன்று பிளாஸ்டிக்கை பயன்படுத்தி கல் உருவாக்கி இருக்கிறான்.

வெறும் மணலை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு வறுத்த பிறகு, அதில் பிளாஸ்டிக் குப்பைகளைப் போட்டு நன்கு சூடுபடுத்தி அதில் கிடைக்கும் மெழுகை, செங்கல் அச்சில் வார்த்தெடுத்து கல் தயாரிக்கிறான். அந்தக் கல்லை காரைக்கால் மாவட்டம், புதுவை மாநிலம் மற்றும் தென்னிந்திய அளவில் நடந்த அறிவியல் கண்காட்சிகளில் காட்சிக்கு வைத்த பிறகுதான், ஜெரால்டின் கண்டுபிடிப்பு வெளியுலகுக்குத் தெரிய ஆரம்பித்தது. இந்தக் கண்காட்சிகளில் அவன் கண்டுபிடிப்புக்குப் பல சிறப்புப் பரிசுகளும் கிடைத்தன. அடுத்ததாக, ஆசிய அளவில் நாகாலாந்தில் நடைபெற இருக்கும் அறிவியல் போட்டிக்கும் இவன் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார் கள்,

காரைக்கால் பகுதியில் கட்டுமான பணியில் இருக்கும் பொறியாளர்கள். அவனுடைய இந்த சாதனைக்கு காரண கர்த்தா அவனுடைய ஆசிரியை வைஜெயந்தி ராஜன்தான்!'' என ஜெரால்டின் வேதனை முதல் சாதனை வரை விவரித்தனர் சக மாணவர்கள்.

வைஜெயந்தி ராஜனை சந்தித்தோம். ''எட்டாம் வகுப்புக்குப் போனால், அந்த முரட்டுப்பையன் ராபின் ஜெரால்டுகிட்ட கொஞ்சம் ஜாக்கி ரதையாநடந்துக்கங்கன்னு எல்லாரும் சொல்வாங்க. அவங்க சொல்ற மாதிரி அவனும் அப்படித்தான் இருப்பான். தானும் படிக்க மாட்டான், படிக்கிற பையனுங்களையும் கெடுத்துடுவான். சொன்ன பேச்சையும் கேட்க மாட்டான். அப்புறம்தான் அவனோட குடும்பச் சூழ்நிலைய விசாரிச்சுத் தெரிஞ்சு கிட்டேன். அதுதான் அவனோட நடத்தைக்குக் காரணம்னு புரிஞ்சது.

அதுக்குப்பிறகு அவன்கிட்ட ரொம்ப அன்பாவும் ஆதரவாவும் நடக்க ஆரம்பிச்சேன். அதற்கு நல்ல பலன் தெரிய ஆரம்பிச்சது. எல்லாரையும் இமிடேட் பண்ணி... அவங்க மாதிரியே பேசி காமிப்பான். அதையே நல்லா பயிற்சி கொடுத்து மிமிக்ரியா மாத்தினோம். சாலமன் பாப்பையாவுடன் பட்டி மன்றங்களில் நான் பேசுவேன். அப்படி ஒரு தரம் போகும்போது, இவனையும் அழைச் சுக்கிட்டு போனேன். அவன் அவரை மாதிரியே பேசினது அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போய், சால்வை போட்டுப் பாராட்டி, நூறு ரூபாய் பரிசும் கொடுத்தாரு. அதுதான் இவனுக்குள்ள பெரிய மாற்றத்தை ஏற்படுத்துச்சு. அப்பதான், 'நாம ஏதாவது உருப்படியா செஞ்சா... பெரிய பெரிய மனுஷங்கள்லாம் நம்மைப் பாராட்டு வாங்க' என்ற நினைப்பு அவனுக்குள் விதையா விழுந்திருக்கு. அதனால் ஏதாவது சாதிக் கணும்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டான். அறிவியல் பாடம் எது நடத்தினாலும் ஆசிரியர் பாலகிருஷ்ணன்கிட்ட 'அதுல இப்படி செஞ்சா என்ன? அப்படி செஞ்சா என்ன?' என்று கேள்விகள் கேட்டுக்கிட்டேயிருப்பான்.

இவனுடைய ஆர்வத்தைப் பார்த்த அவரும், அலுவலக ஊழியர் வரதராஜனும், 'இந்த பிளாஸ்டிக்தான் உலகத்துக்குப் பெரும் தொல்லையா மாறிக்கிட்டு இருக்கு. அதுக்கு எதாவது பண்ண முடியுமா பார்'னு இவன் கிட்ட சொல்லியிருக்காங்க. அதையே வேத வாக்கா எடுத்துக்கிட்டு இப்ப 'பிளாஸ்டிக் கல்'லை உருவாக்கியிருக்கான்! அன்னைக்கு மிமிக்ரிக்குக்கு கிடைச்ச பாராட்டுல விழுந்த விதை, இன்னைக்கு அவனை பிளாஸ்டிக் மூலமா ஒரு சாதனையாளரா மாத்தியிருக்கு!'' என்று மூச்சுவிடாமல் தன் மாணவனின் சாதனை வரலாற்றை எடுத்துச் சொன்னார்.

இந்தப் புகழுரைகள் எதுவும் பாதிக்காத வண்ணம் விளையாடிக் கொண்டிருக்கிறான் ராபின் ஜெரால்டு.

''எல்லாத்துக்கும் எங்க டீச்சர்தான் காரணம். இன்னமும் நிறைய சாதிக்கணும்.வெள்ளம், புயல் சமயங்கள்ல அதை முன் கூட்டியே உணர்ந்து, மக்களுக்கு எச்சரிக்கை செய்றதுக்கு ஏதா வது கண்டுபிடிக்கணும்... கடின நீரை மென்னீராக்க ஏதாவது செய் யணும்... அந்நிய ஆட்கள் வீட்டுக்குள் வந்தால், அவர்களின் அதிர்வுகளை வைத்து எச்சரிக்கை செய்றதுக்கு, கருவி கண்டுபிடிக்கணும். இப்படி சமுதா யத்துக்கு எவ்வளவோ கண்டுபிடிக்கணும் சார்!'' என்று கண்கள் மின்னச் சொல்கிறான், இந்த இளம் விஞ்ஞானி.
''ஜெரால்டு இப்படி சாதனையாளனாக மாறியது, எங்க ஸ்கூலுக்குப் பெருமை. அவனு டைய சாதனைகள் தொடர நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம்!'' என்கிறார், பள்ளி யின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன்.

இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியை வைஜெயந்தி ராஜன், தலித் கிறிஸ்துவ வகுப்பைச் சேர்ந்த ராபின் ஜெரால்டை தன்னுடைய வீட்டிலேயே வைத்து வளர்த்து வருகிறார்.
'பள்ளியில் மினிமம். டியூஷனில் மேக்ஸிமம்' என பாடம் நடத்தும் பல ஆசிரியர்களுக்கு மத்தியில் வைஜெயந்தி ராஜன் போன்ற வர்களும் இருப்பதால்தான்... அப்துல் கலாம் களும், மயில்சாமி அண்ணாதுரைகளும், ஜெரால்டுகளும் தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கிறார்கள்.