''எக்ஸ்கியூஸ் மீ.. நான் ஷியாமளா'' - அவள் குரலில் இருந்த இனிமை குமாரை நிமிர வைத்தது. நிமிர்ந்தவன் உறைந்தான். அவ்வளவு அழகு. கொள்ளை அழகை கூட்டிக் கொண்டு இவள் என்னை கொள்ளை அடிக்க வந்தாளோ? குமாரின் உள்ளம் கவிதை பாட,
''எஸ் மேடம்.. என்ன வேணும்..?''
''இங்க குமார்னு.. யார் அது?''
'அட, என்னிடம் வந்து என்னையே கேட்கும் எனக்கு அறிமுகமில்லாத அழகே.. அதி அழகே..' மனம் விசிலடிக்க, சட்டென சுதாரித்த குமார் அப்பாவியாய், ''எந்த குமார்? இனிஷியல் என்ன? ஆனா, இன்னிக்கு ரெண்டு குமாரும் வரலை'' என்றான்.
சட்டென அவள் முகம் மாறியது.
''இங்கதான் அவர் வேலை செய்றதா சொன்னாங்க. அவர் அப்பா பேர் சுப்ரமணியன். அம்மா பேர் தெய்வானை. ஊர் ஈரோடு..''
'ஆகா.. அது நானேதான். ஏன் இவள் என்னைப் பற்றி விசாரிக்கிறாள்' - அவன் நினைக்கும்போதே அவள் பதில் சொன்னாள்.
''அவரை எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்காங்க. ஆபீஸ்ல அவரைப்பத்தி விசாரிக்கலாம்னுதான்..'' - அவள் சொல்லச் சொல்ல, குமாரின் மனம் கழுத்து வரை துள்ளியது. ஆனாலும் வெளிக்காட்டவில்லை.
''வந்தது வந்துட்டீங்க.. கரெக்டா லன்ச் டயம் வேற.. எங்க கேன்டீன் வாங்களேன் சாப்பாடு சூப்பரா இருக்கும்'' - மெள்ள இருக்கை விட்டெழுந்தான்.
''ம்ம்ம்..'' - அவளும் எழுந்தாள
''பொதுவா இப்படி விசாரிக்கறதுக்கெல்லாம் பெரியவங்கதானே வருவாங்க..?''
''இல்ல.. எனக்குப் பார்த்த மாப்பிள்ளையை நானே விசாரிச்சுத் தெரிஞ்சுக்கலாம்னு நினைக்கிறேன்.. தப்பா?''
''தப்பில்ல.. இருந்தாலும் இப்பல்லாம் பொண்ணுங்க நீங்க கொஞ்சம் ஓவராதான் போறீங்க..'' இவன் சொல்லவும்,
''சரி சரி, குமார்.. அதாவது எஸ்.குமார், உங்களைப் பொறுத்தவரை எப்படிப்பட்டவர்?'' என்றாள் அவள்.
'குமாரிடமே குமாரைப் பற்றியா?'
''ப்ச்.. உங்களோட ஒப்பிட்டா குமார் கொஞ்சம் சுமார்தான். உங்களைவிட உயரம்.. உங்களுக்கேத்த கலர் இருப்பான். ஆனா, உங்க அளவுக்கு..'' - அவன் இழுக்கவும்
அவள் ஆர்வமானாள்.
''ம்ம் சொல்லுங்க.. ஏதாவது பழக்கங்கள்..?''
'த்தோ பார்டா..' மனதுக்குள் நினைத்தவன், ''உங்க அளவுக்கு தைரியசாலி இல்லைனு நினைக்கிறேன்.''
''ரொம்பவும் ஃப்ரெண்டுக்காகப் பரிஞ்சுப் பேசறீங்க. நீங்களும் அவரும் ரொம்ப தோஸ்த்தா?''
''ச்சேச்சே அவன் நல்லப் பையன். ரொம்ப நல்லவங்கக் கூட எல்லாம் நான் சேர்றதில்லைப்பா.''
''ம்ம்.. அப்போ நீங்க ரொம்பக் கெட்டவரோ?''
''ஹலோ மேடம்.. நீங்க குமாரதானே பொண்ணு பார்க்க, ஸாரி மாப்பிள்ளை பார்க்க வந்தீங்க? என்னைப் பத்தி ஏன் விசாரிக்கிறீங்க? ஒருவேளை எங்க ஆபீஸ்ல எங்களுக்கே தெரியாம, சுயவரம் வச்சி உங்களை உள்ளே விட்டுட்டாங்களா?''
சட்டென முகத்தை அவன் காணா வண்ணம் திருப்பிக் கொண்டாள். (அடக்க முடியாமல் வந்த சிரிப்பை மறைக்கத்தான்!)
கேன்டீன் வந்ததும் நடையும் பேச்சும் தடைபட, நல்ல இருக்கையைத் தேர்ந்தெடுத்து அவளை அமர வைத்தான்.
''உங்களுக்கு என்னப் பிடிக்கும்..? இங்கே சாம்பார், வத்தக்குழம்பு எல்லாமே நல்லா இருக்கும். நீங்க என்ன சாப்பிடப் போறீங்களோ அதையே கொண்டு வரச் சொல்லுங்க.''
அவள் கை கழுவும் இடத்துக்குச் சென்றாள்.
'அப்பா.. எவ்வளவு துணிவுள்ள பெண்! ஆனால், நல்ல அழகு. யார் மூலம் இவள் வீட்டுக்கு என் ஜாதகம் கிடைத்திருக்கும்?'
பார்த்துப் பார்த்து அவளை சாப்பிட வைத்தான் குமார். இடையிடையே அவள் பெற்றோர், அவளின் குணங்கள், படிப்பு, வேலை பார்க்கும் அலுவலகம் என அனைத்தையும் அவளே சொன்னாள். வெகு நாட்கள் பழகிய தோழமையை அரைமணி நேரத்தில் இருவரும் உணர்ந்தனர்.
முதலில் அவன் உணவை முடித்து கை கழுவிவிட்டு வந்தான். அவள் அவனிடத்தில் தன் சிறிய கைப்பையைக் கொடுத்து விட்டு, கை கழுவ சென்றாள். கைப்பையின் ஜிப் திறந்தே இருப்பதை கவனித்துவிட்டு ஜிப்பை மூடும் போது ஏதோ ஒன்று தடுக்க, தடுத்த அந்தப் பொருளை.. ஆம் அந்தப் புகைப்படத்தை கவனித்தான்.
அது.. அட, அது அவனுடையப் புகைப்படமேதான்! அவசர அவசரமாக வெளியே எடுத்துப் பார்த்து புகைப்படத்தின் பின்புறம் திருப்ப, தெள்ளத் தெளிவாக அவன் தாயாரின் கையெழுத்தில் அவன் பெயர், அவன் தந்தைப் பெயருடன் எழுதப்பட்டு இருந்தது.