ராமச்சந்திரன்... தமிழ் மக்களின் இதயத்தில் எத்தனையரு பிரமாண்ட இடம் பிடித்த பெயர் இது! இதே பெயரோடு, இதே குடும்பத்திலிருந்து வந்த ஒரு வாரிசு - சொந்த வாழ்க்கையில் ராமனாக இல்லாமல் அடுத்தடுத்து 'மணப்பெண்'களுக்கு வலை விரித்து... இப்போது வழக்கில் சிக்கியிருக்கிறார் என்பது செம ஷாக் செய்தியல்லவா!
புரிந்திருக்குமே... கைது செய்யப்பட்ட ராமச் சந்திரனின் தாத்தா எம்.ஜி.ராமச்சந்திரன்! முன்னாள் தமிழக முதல்வர், 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர்!
எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகன் அப்பு என்ற ரவீந் திரனின் மூத்த மகன்தான் இந்த
ராமச்சந்திரன். திருமணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவான இவரின் பொழுதுபோக்கே திருமணத்துக்குப் பெண் தேடுவதுதான். இவருடைய செயல்முறை பற்றி போலீஸ் வட்டாரத்தில் சொல்வது இதைத் தான் -
''இணையதளங்களில் 'மணமகள் தேவை' என விளம்பரம் கொடுப்பார். குறிப்பாக, கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், மணமாகாத நடுத்தரப் பெண்கள்தான் ராமச்சந்திரனின் இலக்கு! அதிலும் சர்வதேச நிறுவனங்களில் வேலை பார்க்கும் 'எக்ஸிக்யூடிவ்'கள்தான் ராமச் சந்திரனின் முன்னுரிமை! 'வசதியான குடும்பத்தில் பிறந்தவன், சாதி எதுவானாலும் பரவாயில்லை. கைநிறைய சம்பாதிப்பவன்' என தன்னைப் பற்றி சுயஅறிமுகம் செய்து இணையதளத்தில் ராமச்சந்திரன் விரித்த 'திருமண வலை'யில் அடுத்தடுத்துப் பெண்கள் சிக்கினார்கள். குறிப்பாக பெங்களூரு, ஹைதராபாத் பெண்கள்...
அவர்களுடன் முதலில் 'சாட்டிங்' நட்பு வளர்க்கும் ராமச்சந்திரன் அடுத்து அவர்களைத் தேடிப் போவார். சில நாட்கள் அவர்களுடன் தங்குவார். 'அவசரமாக வந்து விட்டேன்... போதுமான அளவுக்கு பணம் எடுத்து வரவில்லை' எனச் சொல்லி கடன் வாங்கிக் கொள்வார். அவர்களுடைய கிரெடிட் கார்டுகளையும் அபேஸ் செய்து அதிலிருந்து பணம் எடுத்துச் செலவு செய்வார். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு சென்னைக்குத் திரும்பி, பழையபடியே 'மணமகள் தேவை' விளம்பர வித்தையைக் கையிலெடுத்து ஏமாற்றுத் தொழிலைத் தொடருவார். இப்படித்தான் கடந்த வருடம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ராமச்சந்திரனின் வலையில் விழுந்திருக்கிறார். வழக்கமான சாட்டிங், மீட்டிங் என அவர்கள் நட்பு இறுக, ராமச்சந்திரனோடு சில நாட்கள் ஹைதராபாத்தில் தனியாகத் தங்கி 'அனைத்தையும்' இழந்திருக்கிறார் ரம்யா. ஹைதராபாத்தின் ஹைடெக் சிட்டியில் புகழ்பெற்ற ஐ.டி. நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் முப்பத்தைந்து வயதான ரம்யா பலமுறை தன்னைக் கல்யாணம் செய்துகொள்ளுமாறு ராமச்சந்திரனைக் கெஞ்சியிருக்கிறார். ஒரு கட்டத்தில் 'போலீஸ§க்குப் போவேன்' என்றும் சொல்லவும்தான், ராமச்சந்திரனிடமிருந்து மிரட்டல் கிளம்பியிருக்கிறது. ரம்யாவின் அலுவலகத்துக்கு மொட்டைக் கடிதாசிகள் படையெடுக்க, கடந்த 19-ம் தேதி ஹைதராபாத் போலீஸின் சென்ட்ரல் க்ரைம் பிராஞ்சில் புகார் கொடுத்தார் ரம்யா. அடுத்த நாளே சென்னை தி.நகர் தண்டபாணி தெருவில் வசித்துவந்த ராமச்சந்திரனை ஆந்திர போலீஸ் அள்ளிக்கொண்டு போனது. இந்த விஷயம் வெளியில் தெரியவர... பெங்களூரு, ஹைதராபாத் திலிருந்து பல பெண்கள் ராமச் சந்திரனுக்கு எதிரான புகார் மனுக்களோடு படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்!'' என்கி றார்கள் நம்மூர் போலீஸார்.
ராமச்சந்திரனை முதலில் விசாரித்த துணை ஆணையர் பிரவீண்குமாருக்கு ராமச்சந்திரன் எம்.ஜி.ஆரின் பேரன்முறை என்று தெரிந்ததுமே ஆடிப் போய்விட்டாராம். இந்த விஷயத்தை அறிந்ததும் ஆந்திர அரசியல் வி.ஐ.பி-க்கள் சிலர் தலையிட்டு விவகாரத்தை சுமுகமாக முடித்து வைக்கச் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும், ராமச்சந்திரன் மீது தொடர்ந்து புகார்கள் வருவ தால் மேற்கொண்டு என்ன செய்வதென்று விழிக்கிறதாம் ஆந்திர போலீஸ்.
இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர். விசுவாசிகள் ரொம்பவே அப்செட்டானார்கள். நாம் அப்பு குடும்பத்தினரைத் தொடர்புகொண்டோம். பேச மறுத்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர். குடும்ப நலவிரும்பிகள் சிலரிடம் பேசினோம். ''அப்புவுக்கு மூன்று மகன்கள். ராமச்சந்திரன்தான் மூத்த மகன். எம்.ஜி.ஆரின் நினைவாக முதல் பையனுக்கு அவர் பெயரையே வைத்தார் அப்பு என்கிற ரவீந்திரன். ஆனால், மகனோ தன் பெயரில் அப்பாவின் பெயரையும் தாத்தாவின் பெயரையும் சேர்த்து ரவீந்திரன் ராமச்சந்திரன் என வைத்துக்கொண்டார். சிறு வயதில் நன்றாகப் படித்துக் கொண்டிருந்த ராமச்சந்திரன் படிப்பதில் மக்கர் செய்ய, டெல்லியில் இருக்கும் உறவினர் வீட்டில் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்தார் அப்பு. பட்டப் படிப்பையும் பாதியில் நிறுத்திய ராமச்சந்திரனுக்கு, ஏழு வருடங்களுக்கு முன்பு சென்னை அடையார் பார்க் ஹோட்டலில் தடபுடலாகத் திருமணம் நடந்தது.
கேரளாவில் பாரம்பரியம் மிக்க குடும்பத்துப் பெண்ணை மணந்துகொண்ட ராமச்சந்திரனுக்கு, வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பது ஓரிரு ஆண்டுகளில் தெரியவந்தது. அதனால் குடும்பத்தில் பிரச்னைகள் வெடித்து, ராமச்சந்திரனின் மனைவி தன் மகனைத் தூக்கிக்கொண்டு தாய்வீட்டுக்கே போய்விட்டார். அதன் பிறகுதான் ராமச்சந்திரனின் வாழ்க்கை திசைமாறத் தொடங்கியது. பல பிரச்னைகளில் சிக்கினார். எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த படங்களை மிகக் குறைந்த விலைக்கு விற்றுவிட்டார் என்ற விவகாரத்தில் சிக்கிய ராமச்சந்திரன் மீது இன்னும்கூட வழக்கு நிலுவையில் இருக்கிறது. ஆனால், அனைத்தையும் கடந்து ராமச்சந்திரனின் அம்மா நிர்மலா எப்படியாவது மகனையும் மருமகளையும் சேர்த்து வைத்து, அவர்களுக்குப் புது வாழ்க்கை அமைத்துத் தரப் போராடிக்கொண்டிருக்கிறார். நிர்மலாவின் முயற்சிகளுக்குப் பலன் தரும் வகையில் ராமச்சந்திரனின் மனைவி யும் கணவரோடு சேர்ந்து வாழ சம்மதித்திருந்தார்.
இந்நிலையில், ராமச்சந்திரனின் ஆறு வயது மகனுக்கு இதயத்தில் ஓட்டை இருப்பதாக மருத்துவர்கள் சொல்லவே, அந்தக் குடும்பம் ஆடிப்போனது. எப்படியாவது அந்தக் குழந்தையைக் காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், ராமச் சந்திரனோ இப்படியரு 'நல்ல பெயரை' குடும்பத்துக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்!'' என்று சொன்னார்கள்.
''ஏற்கெனவே, எம்.ஜி.ஆர். தோட்டத்து விஜயன் கொலையில் சிக்கினார் விஜயனின் உறவுக்காரப் பெண்மணி பானு. உடனே, எம்.ஜி.ஆர். பெயரைக் குறிப்பிட்டு அந்த விவகாரத்தைப் பரபரப்பாக்கியது மீடியா. இப்போது ராமச்சந்திரன் ஏமாற்று வழக்கில் சிக்கியிருக்கிறார். இது எந்தளவுக்கு எம்.ஜி.ஆர். குடும்பப் பெயருக்கு பாதகம் செய்யப் போகி றதோ...'' என்று சொல்லி வருந்துகிறார்கள் எம்.ஜி.ஆர். குடும்ப வாரிசுகள் சிலர்.